வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார். எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரண பொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவுகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்தப் பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். இப்போது வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் படித்தால், ஏதோ ஒரு கடினமான வேற்றுமொழியில் சட்டத்தைக் கற்பதுபோன்று மிகுந்த குழப்பம் உண்டாகிறது. மேலும், அத்தகைய நூல்களில், மிக அதிகமான பொருள்பிழைகளும் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) இந்திய சாட்சியச் சட்டம், (3) குற்ற விசாரணை முறைச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ்நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்களை அர்ப்பணிக்கிறேன். இதை என் வாழ்நாளின் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். தமிழன் என்று சொல்ல பெருமைப்படுகின்றேன். சட்டங்களைத் தமிழில் கற்க, அறிந்துகொள்ள, நீதிமன்றத்தில் வழக்காட, நானும் என்னால் இயன்றவரையில் தமிழில் சட்ட நூல்களைக் கொண்டுவரும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.